Friday, February 18, 2011

லாக் அவுட் பண்ணிட்டு வாக் அவுட் பண்ணு ! (வியாபாரச் சிறுகதைகள்-1)

உண்மையிலேயே அந்த 10 பேரும் மிகவும் அதிர்ந்திருந்தனர். ஆச்சர்யக்குறியும், கேள்விக்குறியும் சேர்ந்துக் கலந்தடிக்கப்பட்ட உணர்ச்சி அவர்களைக் கொஞ்சம்நேரம் அசைவற்றுப் போகவைத்திருந்தது. மௌனங்களில் கரைந்த சில நிமிடங்களுக்குப் பின் தங்களுக்குள் அவர்கள் குசுகுசுக்கத் தொடங்கி இருந்தனர்.

'இது என்னது பைத்தியக்காரத்தனம்! வயது ஏற ஏற இந்த ஆளுக்கு மூளை குழம்பிவிட்டதா என்ன?'

காலையில் 10 மணிக்கு அவ்ர்கள் அந்த அறைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட வியப்பு இப்போது பன்மடங்காகி இருந்தது.

அவர்கள்?!

இளமையானவர்கள்; துடிப்பானவர்கள்; மூளையின் ஒவ்வொரு நியூரானிலும் 'பணம் பண்ணுவது எப்படி?' என்று போதிக்கப் பட்டிருந்தவர்கள்; இந்தியாவின் தலைசிறந்த பி.ஸ்கூல்கள் எனப்படும் ஐ.ஐ.எம் போன்ற பிஸினஸ் ஸ்கூல்களில் டிஸ்டிங்க்க்ஷனில் வெளிவந்து நாட்டின் மிக முக்கிய தொழில்நிறுவனங்களின் மோஸ்ட் வாண்டட் ஆக இருக்கும் மேனேஜ்மெண்ட் புலிகள்.

அந்த அறை அழகாக இருந்தது. எளிமையாக பணக்காரத்தனத்தை பறைசாற்றுவது எப்படி என்பதற்கு உதாரணமாக இருந்தது. அது அந்த நிறுவனத்தின் கான்ஃபரன்ஸ் ஹால். ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன்கூடிய ப்ரொஜக்டர். உயர்தரத் தோலினாலான நாற்காலிகள். ஜில்லென்று ரோஜா மணத்தைப் பரப்பும் ஏ.சி. மிக அழகான லேசாக நடனமிடும் திரைச்சீலைகள். நடுநாயகமாக அவர் அமர்ந்திருந்தார்.

காலையில் அவர் அறைக்குள் வந்து பேச ஆரம்பித்த தொனியில் துவங்கிய அந்த நொடி ஆச்சர்யம் இப்போது அவர் முடித்தபின்னும் அதிர்வலைகளைக் கிளப்பி இருப்பதைப் புரிந்துகொண்ட அவர் லேசான புன்னகையுடன் இருந்தார். அவர் 45 வயதிற்கான கம்பீரத்துடன் 'நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்' என்று தன் உடல்மொழிகளால் பறைசாற்றிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் பின்னோக்கிப் போகலாம்.

மிகச் சரியாக 10 மணிக்கு அவர் நுழைந்து, ஃபார்மாலிட்டி விசாரிப்புக்களும், அறிமுகங்களும் பரஸ்பரம் முடிந்தபின் உரையாடலை இப்படித் தொடங்கினார்.

"ஜென்டில்மென்,முதலில் உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி, நான் உங்களுக்கு பேசிய சம்பளம் உங்களுக்கு திருப்தி தருகிறதா? இல்லை என்பவர் இப்போதே என்னிடம் தெரிவியுங்கள், அரை மனதுடன் யாரையும் நான் வேலை வாங்குவதில்லை."

அறையில் எந்த விதமான மாற்றமும் இல்லை, திருப்தி இல்லை என்று கூறினால் ஒரு வேளை சம்பளம் அதிகப்படுத்தலாம் அல்லது வேலை பறிபோகலாம், அதைவிட அவர்கள் படித்து வந்த இடத்தில் கற்று கொடுக்கப்பட்ட மேஜை நாகரிகம் காரணமாக கூட பேசாமல் அமைதி காத்து இருக்கலாம் .

"ஃப்ரெண்ட்ஸ்! நீங்கள் சேர்ந்திருக்கும் இந்த நிறுவனம்,இன்றைய தேதியில் நஷ்டக் கணக்கில் ஓடுகிறது. கடந்த இரண்டு வருடத்தில் நமது விற்பனைத் திறன் 30 % மற்றும் தயாரிப்புதிறன் 35 % என இறங்கு முகத்தில் உள்ளன.எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லை.இன்று என்னுடைய குழுமத்தில் நான் பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவந்தாலும்,என்னுடைய இந்த நிறுவனம் மிக முக்கியமானது, ஏனென்றால் நான் வளர்ந்ததே இந்த நிறுவனத்தை வைத்துதான்" என்று அவர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் கண்களில் ஒரு பொலிவு தென்பட்டது , ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை தூக்கி நிறுத்த வேண்டிய வேலை வரவிருப்பதை நினைத்து அவர்களது முகத்தில் ஒரு பெருமிதம் தெரியத்தான் செய்தது . ஒவ்வொருவரும் தத்தமது மனதில் பல சில நுணுக்கங்களை தயார் நிலையில் வைத்துகொள்ள ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர் . ஆனால் தலைவரின் பேச்சு சற்று மர்மமாக தொடர்ந்து கொண்டிருந்தது...."நான் உங்களை வேலையில் அமர்த்தியது இந்த நிறுவனத்திற்காக மட்டுமே , நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், உங்கள் மொத்த திறமையையும் பயன்படுத்தி, இந்த நிறுவனத்தை இன்னும் இரண்டே வருடங்களில் மூடுவதற்குண்டான வழிகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்கவேண்டும்" என்று சற்று நிறுத்தி அனைவரின் முகங்களையும் ஒரு முறை தீர்க்கமாக பார்த்தார். ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்த மேனேஜர்கள், இந்த இடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தனர், எந்த ஒரு நிறுவனத் தலைவரும் யோசித்துக்கூட பார்க்காத ஒரு விஷயத்தை இவர் செய்யத்துணிகிறார்.

இந்த வார்த்தைகள்தாம் நாம் பார்த்த துவக்க பாராக்களின் காரணம்!

இப்போது அவர் மீடும் லேசாகத் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.

"இப்படிச்சொல்வதில் ஒரு காரணம் உள்ளது, இந்த நிறுவனம் இதுவரை ஈட்டிக் கொடுத்த அத்தனை லாபம் மட்டுமின்றி, மிகப்பெரிய நஷ்டமும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்,இந்த நிறுவனம் இதே போக்கில் சென்றால் இன்னும் பத்து வருடத்தில் மூட வேண்டியிருக்கும், இப்போதே மூடினால் எட்டு வருட நஷ்டத்தை மீதப்படுத்தலாம்தானே?சுமார் ஆயிரம் தொழிலாளிகள் இந்த நிறுவனத்தை நம்பி இருப்பதால், என்னால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கமுடியவில்லை! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இந்த நிறுவனத்தை இரண்டே வருடத்தில் யாருக்கும் பிரச்சினை இன்றி மூடுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து ஒரு அறிக்கையை அளிக்கவேண்டும், அதற்கு உங்களுக்கு இரண்டு மாத காலம் தருகிறேன், உங்களுக்கு தேவையான விவரங்கள் இன்னும் அரைமணிநேரத்தில் உங்களை வந்து சேரும்" என்று சொல்லி முடித்தார் தலைவர்.

மீட்டிங் முடிந்ததற்கு அடையாளமாக அவரது பார்வை இருந்தது.

ஆச்சர்யம், திகைப்பு, குழப்பம் என் அனைத்தும் கலந்த கலவையாய் வெளியே வந்த ஐ.ஐ.எம்.கள் அடுத்த இரண்டு மாதங்கள் கூடுவதும், கலைவதுமாய் இருக்க அந்த கான்ஃபரன்ஸ் ஹாலும் அவர்களோடு சிநேகிதமாகிப் போனது. காலண்டர் தாள்கள் கிழியக்கிழிய கம்ப்யூட்டர் ப்ரிண்டர் காகிதங்களைத் துப்பித் தள்ளியது. ஒருவழியாக இரண்டு மாத முடிவில் நடந்த அந்த மீட்டிங்கில் அவர்கள் தமது ரிப்போர்ட்டை சமர்ப்பித்தனர்.

"என்ன இது ஃப்ரண்ட்ஸ்? நான் இரண்டு வருஷங்களுக்குள் முடிக்கவேண்டும் என்று சொன்னது உங்களுக்கு நான்காண்டுகள் என்று காதில் விழுந்ததா என்ன?" அட்சரசுத்தமான ஆங்கிலத்தில் உதட்டைப் பிதுக்கினார் நிறுவனத் தலைவர்.

"இல்லை சார். நீங்கள் கொடுத்திருப்பது வழக்கமான ப்ராஜக்ட் அல்லவே!" மெல்ல வாயெடுத்த ஒரு ஐ.ஐ.எம்மை இடைமறித்தவர்

" ஐ டோண்ட் நீட் எனி டைப் ஆஃப் எக்ஸ்பிளனேஷன்ஸ் மை டியர் ஜெண்டில்மென். வழக்கமான செக்குமாட்டுச் சிந்தனை எனக்கு வேண்டாம். நான் உங்களிடம் எதிர்பார்ப்பது லேட்டரல் திங்க்கிங். எனிஹவ், நான் இன்னும் உங்களுக்கு இரண்டுமாத கால அவகாசம் தருகிறேன். ப்ளீஸ் கம் வித் எ க்ளீன் ரிப்போர்ட்"

மீண்டும் காலண்டர் தாள்களும் மணித்துளிகளும் காற்றில் கரைந்தன. இரண்டு மாதம் முடிவில் ஒரு அறிக்கையுடன் வந்தார்கள் நம்மவர்கள்.இம்முறை மூன்று வருடத்திற்குள் எப்படி இந்த நிறுவனத்தை மூடுவது என்று அறிக்கையை தயாரித்திருந்தார்கள்.அதை கவனமாக படித்து பார்த்த தலைவர்,வெகு நுணுக்கமான விசயங்களையும்,நான்கு மாத உழைப்பையும்,பத்து மேனேஜ்மென்ட் குருக்களின் அறிவாற்றலையும் பார்த்து வியந்து பாராட்டினார்.அடுத்தநாளே போர்டு மீட்டிங் என்று அறிவித்து ,அனைத்து கட்ட ஊழியர்களையும் அழைத்தார் .

போர்டு மீட்டிங்கிற்கு வந்திருந்த அனைவரின் கைகளிலும் அறிக்கை நகல்களை கொடுத்து படிக்க வைத்தார் . பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தார்
"அன்பர்களே!இந்த அறிக்கையில் நமது நிறுவனத்தை இன்னும் மூன்று வருடங்களில் எவ்வாறு மூடலாம் என்பதற்கான வழிமுறைகள் உள்ளது!நான் உங்களிடம் வேண்டி கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,இதில் என்னென்ன எழுதப்பட்டுள்ளதோ அதை அப்படியே எதிர்மறையாக செய்யுங்கள்,மூன்றே வருடங்களில் நமது நிறுவனம் முன்னணிக்கு வருவது உறுதி" என்றவர் குரலில் தெரிந்த உத்வேகம் மெல்ல மெல்ல எல்லாரிடமும் பற்றிக்கொள்ளத் துவங்கியது.வேறு எந்த ஒரு உபாயத்தையும் கையாள வேண்டியதில்லை என்றும்,இதை மட்டுமே வேதமாக நினைத்துக்கொண்டு வேலையை ஆரம்பிக்கும்படி கட்டளை இட்டார் .

ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றி யோசிப்பவர்களுக்கும், அடித்தளத்தைப் புரிந்து வேலை செய்பவகளுக்கும் வெற்றி கிட்டியே தீரும் என்பதற்கு இந்த நிறுவனமும் நிறுவனத் தலைவரும் ஒரு எடுத்துக்காட்டு . மூன்றே வருடங்களில் இந்த நிறுவனம் மகத்தான வெற்றியை பெற்றது .

குறிப்பு: இது உண்மையில் நடந்த ஒரு கதை! நிறுவனத்தின் பெயர் இ.ஐ.டி பார்ரி (EID PARRY.

5 comments:

விந்தைமனிதன் said...

கமெண்ட் ஃபாலோ அப்புக்காக...

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்ப பிரமாதமா வந்திருக்கு!

அர. பார்த்தசாரதி said...

welcome aboard

Rathi said...

Good Luck, both of you.

கதைவனம் said...

செந்திலண்ணனுக்கும், ரதியக்காவுக்கும் நன்றிகள்!

Post a Comment